அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு
வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. இப்பட நிகழ்வில் பேசிய சுஹாசினி, ‛‛என்னுடைய நடிப்பை பார்த்தவர்கள் புகழ்ந்து பேசும்போது நாம் அவ்வளவு சீனியர் ஆகி விட்டோமா என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் ஒரு முறை அமெரிக்காவுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது ஒரு ரசிகை படக்குழுவுக்கு சாப்பாடு கொண்டு வந்தார். அப்போதுதான் என் வயதின் மதிப்பு எனக்கு தெரிந்தது என்று பேசினார் சுஹாசினி.
அதையடுத்து பேசிய பார்த்திபன், எனக்கு வயது 50 ஆகிவிட்டது என்று வெளிப்படையாக சொல்லக் கூடிய ஒரு அழகி என்றால் அது சுஹாசினி ஒருவர் மட்டுமே. காரணம் பெண்களை பொறுத்தவரை 28 வயசுக்கு பிறகு தங்களது வயதை சொல்ல மாட்டார்கள். ஆனால் தனது அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி என்று கூறினார்.
இப்படி பார்த்திபன் பேசி முடிக்கும் போது, ‛எனக்கு வயது இப்போது 63 ஆகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்' என்று கூறினார் சுஹாசினி. அதையடுத்து பார்த்திபன் இதுதான் திமிர் என்பது என்று பதில் கொடுக்க, விழா அரங்கில் பெரும் கரகோஷமும், சிரிப்பும் எழுந்தது.