உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல்

பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல்

ஒரு காலத்தில் கமலுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்டவர்தான் மோகன். கமலின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் மோகனிடம் சென்ற காலமும் இருந்தது.

கர்நாடகாவை சேர்ந்த மோகனுக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அவரது குரலும் அவரது தோற்றத்துக்கு ஏற்ற குரலாக இல்லாமல் இருந்தது. இதனால் அவருக்கு எஸ்.என்.சுரேந்தர் (விஜய்யின் தாய்மாமன்) குரல் கொடுத்தார். எஸ்.என்.சுரேந்தர், நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அவர் மோகனுக்கு 70 படங்கள் வரை டப்பிங் பேசினார்.

மோகன் முதன் முதலில் நடித்ததே கமலுடன்தான். பாலுமகேந்திரா இயக்கிய 'கோகிலா' என்ற கன்னட படத்தில் கமலுடன் நடித்தார் . பின்னர் நடிக்கவில்லை. அதன் பிறகு 1984ம் ஆண்டு வெளிவந்த 'ஓ மானே மானே' என்ற படத்தில் மோகனுக்காக 'பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே' என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார் கமல்.

இந்த பாடலை கமல் பாடியது குறித்து ஒரு சுவையான தகவல் உண்டு. வேறு படத்தின் பாடல்கள் குறித்து இளையராஜாவுடன் பேச பிரசாத் ஸ்டூடியோ சென்றார் கமல். அப்போது இளையராஜா 'பொன்மானை தேடுதே' பாடலின் ஒத்திகையில் இருந்தார்.

பாடல் ரொம்ப பிரமாதமாக இருக்கிறதே யார் பாடுகிறார்கள் என்றார் கமல். யாரையும் முடிவு செய்யவில்லை உனக்கு பிடிச்சிருந்தா நீயே பாடிவிடு என்றார் இளையராஜா . கமலும் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த பாட்டுக்கு நடிக்கப்போவது மோகன் என்றாராம் இளையாராஜா. 'யாரு நடிச்சா என்ன பாட்டு உங்களோடதுதானே' என்ற கமல் உடனே பாடிக் கொடுத்தாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !