பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாகாணங்கள் பிரிந்தது. அந்தந்த மாநிலங்கள் தங்கள் மொழி திரைப்படங்களுக்கு தனி முக்கியத்தும் கொடுத்தது. தனித்தனியாக அரசு விருதுகளும் அறிவித்தது. அந்த வகையில் 1949ம் ஆண்டு தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது அறிவிப்புக்கு பிறகு 1949ம் ஆண்டுக்கான முதல் சிறந்த திரைப்படத்திற்காக விருதை 'நவ ஜீவனம்' பெற்றது. இந்த படத்தை நடிகை கண்ணாம்பா தனது கணவருடன் இணைந்து தயாரித்திருந்தார். அவரே நாயகியாக நடித்தார். வி.நாகையா, ஸ்ரீராம், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார், கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் இயக்கி இருந்தார்.
எளிய தொழிலாளி நாகையாவும், அவருடைய மனைவி கண்ணாம்பாவும், பெற்றோரை இழந்த தன் தம்பி ஸ்ரீராமை சிறுவனாக இருக்கும்போதிலிருந்து வளர்க்கிறார்கள். வளர்ந்து கல்லூரிக்கு செல்லும் ஸ்ரீராம் உடன் பயிலும் மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.
வரலட்சுமி மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நமக்கு வேண்டாம் என்று அண்ணனும் அண்ணியும் ஸ்ரீராமை எச்சரிக்கிறார்கள். ஆனால், அவர்களின் சொல் கேளாமல் வரலட்சுமியைத் திருமணம் செய்து கொள்கிறார். மாமனாரின் மரணத்துக்குப் பின் ஸ்ரீராம் முதலாளி ஆகிறார். அதன் பிறகு ஸ்ரீராமின் வாழ்க்கை மாறுகிறது. அதை எப்படி அண்ணனும், அண்ணியும் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.