உபேந்திராவின் படங்களை இயக்கியிருந்தால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன் : இயக்குனர் சுகுமார் புகழாரம்
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, திருமணத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் சீதா பயணம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை அவரது தந்தை அர்ஜுனே எழுதி இயக்கியுள்ளார். கதாநாயகனாக நிரஞ்சன் சுதீந்திரா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புஷ்பா 2 புகழ் தெலுங்கு இயக்குனர் சுகுமாரும், பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான உபேந்திராவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் சுகுமார் உபேந்திராவை பற்றி பேசி புகழ்ந்து தள்ளிவிட்டார்.
உபேந்திரா பற்றி அவர் கூறும்போது, “உபேந்திரா போல சினிமாவில் அதிக ஆர்வமும் தீவிரமும் கொண்ட ஒரு இயக்குனரை நான் பார்த்ததே இல்லை. ஓம், ஏ, மற்றும் உபேந்திரா போன்ற படங்கள் என்னை அப்படியே பறக்க வைத்தன. நேர்மையாக சொன்னால் அந்த படங்களை எல்லாம் நான் இயக்கியிருந்தேன் என்றால் சந்தோசமாக எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன். அந்த அளவிற்கு சினிமாவின் அடையாளங்களாக அந்த படங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல சமீபகாலமாக என்னுடைய படங்களின் கதை சொல்லும் விதத்தில் புத்திசாலித்தனமாக எதையும் நீங்கள் கவனத்திருந்தால் அது உபேந்திராவின் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் ஆக நான் எடுத்துக் கொண்டதுதான். நான் மட்டுமல்ல ஒவ்வொரு இயக்குனரும் அவரிடம் இருந்து இது போன்ற இன்ஸ்பிரேஷனை எடுத்துக்கொள்ள முடியும்” என்று பாராட்டினார்.