உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா

தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவ்வப்போது தமிழிலும் நடிப்பார். தற்போது 'குபேரா, கூலி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நாகார்ஜுனா. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் அமலா. அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வருகிறார் அகில். திருமண வயதில் உள்ளவர் ஜைனாப் ரவ்ட்ஜி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார் அகில். அவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரும் ஜுன் 6ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளனர் நாகார்ஜுனா அமலா. உடன் மணப்பெண்ணின் பெற்றோரும் சென்றுள்ளனர்.

நாளை சென்னையில் தனுஷ், நாகார்ஜுனா நடித்து ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள 'குபேரா' படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. திருமண வேலைகள் காரணமாக நாகார்ஜுனா அதில் கலந்து கொள்வது சந்தேகம் என்கிறார்கள். ஒருவேளை இங்குள்ள முக்கிய சினிமா பிரபலங்களை அழைப்பதற்காக வந்து அப்படியே நிகழ்விலும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !