புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்த படம் 'லால் சலாம்'. இப்படம் கடந்த வருடம் வெளிவந்தது. தமிழில் ஒரு படம் வெளியான பின் நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியாகும். ஆனால், இந்தப் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை என்ற ஒரு செய்தி வெளியாகியது.
அதன்பின் விரைவில் ஓடிடி ரிலீஸ், என தகவல் வெளியாகி அதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாமல் தகவலாகவே கடந்து போனது. இந்த முறை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படத்தை நாளை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்' காணாமல் போனது என்ற பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் இருக்கும் காட்சிகளைத் எடிட் செய்து படத்தை வெளியிட்டார்கள். படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு காணாமல் போன ஹார்ட் டிஸ்க்கும் ஒரு காரணம் என படக்குழுவினர் சொன்னார்கள். படம் வெளியான சில மாதங்களுக்குப் பிறகு அந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டதாகச் செய்திகள் வந்தன.
தற்போது அந்த ஹார்ட் டிஸ்க்கிலிருந்து காட்சிகளையும் சேர்த்து, புதிய காட்சிகளுடன்தான் நாளைய ஓடிடி ரிலீஸ் இருக்கப் போகிறதாம். எனவேதான் ஓடிடி அறிவிப்பில் 'நீட்டிக்கப்பட்ட பதிப்பு' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.