உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர்

பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர்


தமிழ் திரையுலகில் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரிடையாக இயக்குநர் அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர்தான் 'இயக்குநர் சிகரம்' கே பாலசந்தர். நாடகக் கலையின் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக சில வித்தியாசமான நாடகங்களை எழுதி, அரங்கேற்றி சிறந்த நாடக ஆசிரியராக புகழ் பெற்றிருந்த இவர், எம் ஜி ஆரின் “தெய்வத்தாய்” என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். “சர்வர் சுந்தரம்”, “நீர்க்குமிழி”, “மேஜர் சந்திரகாந்த்” போன்ற வெற்றி பெற்ற இவரது மேடை நாடகங்கள் பல திரைப்படங்களாக வெளிவந்தும் வெற்றி வாகை சூடியிருக்கின்றன. அந்த வரிசையில் இடம் பெற்ற இவரது மேடை நாடகங்களில் ஒன்றுதான் “எதிர் நீச்சல்”.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்” கதையைத் தழுவி கே பாலசந்தர் இந்த “எதிர் நீச்சல்” நாடகத்தை உருவாக்கியிருக்கின்றார் என்று பலர் அப்போது கூறி, அது ஒரு வதந்தி போலவே பரவத் தொடங்கிய நிலையில், அதிலிருந்து விடுவிக்க எழுத்தாளர் ஜெயகாந்தனைத் தேடிப் போய் “எதிர் நீச்சல்” நாடகத்தைக் காண அழைத்து வந்தார் நடிகர் நாகேஷ். பின் நாடகத்தைப் பார்த்த ஜெயகாந்தன், தனது “யாருக்காக அழுதான்” கதைக்கும் “எதிர் நீச்சல்” கதைக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என கே பாலசந்தரிடமும், நாகேஷிடமும் கூறிச் சென்றார். ஆனால் வங்காளத்திலிருந்து வந்த சாம்பு மித்ராவின் “காஞ்சன் ரங்கா” என்ற நாடகத்தின் கதையை தமிழுக்கு ஏற்றாற் போல் எழுதி அதைத்தான் “எதிர் நீச்சல்” ஆக்கியிருந்தார் இயக்குநர் கே பாலசந்தர்.

மேடையில் வெற்றி பெற்ற “எதிர் நீச்சல்” நாடகத்தை வெள்ளித்திரை வடிவில் தந்து அதிலும் வெற்றி என்ற இலக்கை எளிதாய் எட்டிப் பிடித்திருந்தார். மேடை நாடகத்தில் நடித்திருந்த நாகேஷ், சவுகார் ஜானகி, ஸ்ரீகாந்த், மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோரை அவர்கள் ஏற்று நடித்திருந்த அதே கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து திரைப்படத்தையும் வெற்றி பெறச் செய்திருந்தார் இயக்குநர் கே பாலசந்தர். 1968ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் 'இயக்குநர் சிகரம்” கே பாலசந்தர், நடிகர் நாகேஷ் ஆகியோருக்கு மட்டுமின்றி படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு திரைக்கலைஞருக்கும் பேர் சொல்லும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருந்தது என்றால் அது மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !