உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

புதுடில்லி: ''கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்'' என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், திரிஷா, சிம்பு உள்ளிட்டோர் நடித்த தக் லைப் திரைப்படம், ஜூன் 5ல் வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து உருவான மொழி கன்னடம்' என்றார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அங்கு படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், தக் லைப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்ததை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஜூன் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது மொழி பிரச்னையை காரணம் காட்டி தக் லைப் படத்தை தடை செய்ய முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தக் லைப் படம் திரையிடப்பட்டால் வேண்டிய பாதுகாப்பை செய்வதாக கர்நாடக அரசு தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

* தக் லைப் திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்.

* திரைப்படம் வெளியிடப்பட வேண்டும். அது உங்கள் கடமை. தியேட்டருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது கூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக் கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?

* நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது.

* கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்'' என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !