உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்


மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து 2013ல் வெளிவந்த படம் 'திரிஷ்யம்'. படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மட்டுமல்லாமல் சீனா, கொரிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் 2015ல் வெளியான படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்திருந்தனர். தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

'திரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாக அதன் 2வது பாகத்தை மீண்டும் மோகன்லாலை வைத்து இயக்கினார் ஜீத்து ஜோசப். ஓடிடியில் மட்டுமே வெளியான இப்படம், ஓடிடியிலும் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் 3ம் பாகத்தை அக்டோபரில் துவக்குகின்றனர். ஆனால், தமிழில் 2ம் பாகம் இன்னும் உருவாகவில்லை.

இந்த நிலையில் 'திரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் கமலுக்கு பதில் ரஜினிகாந்த் தான் இயக்குனரின் முதல் சாய்ஸாக இருந்துள்ளது. இந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ள ஜீத்து ஜோசப், ''திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி தான் என் முதல் தேர்வாக இருந்தது. ஆனால் படத்தில் போலீஸ் தாக்குவது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்காது என நினைத்தேன்.

இதற்கிடையே கமல்ஹாசன் படத்தை பார்த்துவிட்டு படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதற்கான பணிகளை துவங்கிய சமயத்தில், ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்தது. 'எனது நண்பர் ஒருவர் இப்படத்தில் என்னை நடிக்கச் சொன்னார். நான் ரெடி' என்று சொன்னார் ரஜினி. அப்போது கமல் சார் நடிக்கவிருப்பதாக சொன்னவுடன், 'சூப்பர்! வாழ்த்துகள்!' என பெரிய மனதுடன் அவருக்கே உரித்தான பாணியில் கூறி எங்களை வாழ்த்தினார்'' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !