அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி'
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி எனும் நட்ராஜ், ‛நீலி' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 'நீங்காத எண்ணம்', 'மேல்நாட்டு மருமகன்' ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இந்த படத்தை இயக்குகிறார். உதயா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. 2400 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் இந்த நீலி திரைப்படம் உருவாகிறது.
படம் குறித்து இயக்குநர் எம்எஸ்எஸ் கூறும்போது, “நீலி சம்பந்தமான நிறைய வரலாற்று விஷயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனுடன் கொஞ்சம் கற்பனை நிகழ்வுகளையும் கலந்து இந்த கதையை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தின் வித்தியாசமான கதையை கேட்டதுமே பிடித்துப்போய் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டார் நடிகர் நட்டி. இரண்டு முக்கிய நாயகிகள் நடிக்கிறார்கள். பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது” என்றார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நீலி என்ற பெண் தெய்வமான கதைகள் பேசப்படுகின்றன. அந்த பெண் ஏமாற்றப்பட்டது, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கியது குறித்து பல பாடல்கள் உள்ளன. பல ஊர்களில் அந்த தெய்வதற்கு கோயில்கள் உள்ளன. அது குறித்து இந்த படம் உருவாகிறதா? வேறு கதையா என்று இப்போதைக்கு படக்குழு கூறவில்லை. இளையராஜா படத்துக்கு இசைமைப்பார் என்றும் தெரிகிறது.