50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்தவர் சூரி. அவர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'மாமன்' படம் நேற்றுடன் 50வது நாளைத் தொட்டுள்ளது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது படம் 50வது நாளில் வந்ததையடுத்து சூரி, “மாமன் திரைப்படம் தனது 50வது நாளை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த சிறப்பான தருணத்தில், மாமன் திரைப்படத்தின் உணர்வுகளை உணர்ந்து இதயபூர்வமாக ஆரத்தழுவிய நம் தமிழ்குடும்பங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அழகிய பயணத்தில், என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த என் அருமையான சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், இந்த வெற்றியை பரவலாக்கி, உலகிற்கு எடுத்துச் சென்ற ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அன்பு ரசிகர்களின், தொடர்ந்த ஆதரவு எப்போதும் எனக்கு உந்து சக்தியாக இருக்கும். என் அடுத்தடுத்த படைப்புகளிலும் உங்களின் அன்பிற்கு பாத்திரமாக ஆத்மார்த்தமாக உழைப்பேன்.
உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும் சொந்தமானது!,”
என நன்றி தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் வெளிவந்த அதேநாளில் வந்த சந்தானம், யோகிபாபு ஆகியோர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவியது.