'டைட்டானிக்' ரிலீஸ் : தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைக்கும் கலையரசன்
தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். அவரது தயாரிப்பில், ஜானகிராமன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜவேரி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்'.
இப்படத்தின் முதல் பார்வை, டீசர் ஆகியவை 2018ம் ஆண்டில் வெளிவந்தது. அதன்பின் டிரைலரை 2022ம் ஆண்டு வெளியிட்டார்கள். படம் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் சில சிக்கல்களால் வெளியாகாமலேயே உள்ளது.
இப்படத்தின் நாயகனாக கலையரசன் நேற்று திடீரென எக்ஸ் தளத்தில் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு ஒரு கோரிக்கை வைத்து பதிவிட்டுள்ளார். “குமார் சார், 'டைட்டானிக்' படத்தை ஏன் இன்னும் ரிலீஸ் செய்யாமல் இருக்கிறீர்கள்?. இப்படத்தின் இயக்குனர் ஜானகிராமன், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அவர்களது கடுமையான உழைப்புக்குப் பின்னர் நல்ல வெளியீட்டிற்குத் தகுதியானவர்கள். இது ஒரு சிறந்த படம் சார். நம் அனைவருக்கும் இந்தப் படம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் சார், ப்ளீஸ்,” என கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது பதிவை நாயகி ஆஷ்னா ஜவேரியும் பகிர்ந்து, 'காத்திருக்க முடியவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது பதிவிற்கு தயாரிப்பாளர் சி.வி.குமார் இன்னும் எந்த பதிலையும் பதிவிடவில்லை.