உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு

ஒளிப்பதிவாளராக இருந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். அடுத்து அவர் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் பாராட்டுக்களைப் பெற்றது. இரண்டு படங்களுக்குமே 'பாசிட்டிவ் விமர்சனங்கள்' தான் அதிகம் வந்தது. 'மெய்யழகன்' படத்திற்கு மட்டும் சில 'நெகட்டிவ் விமர்சனங்கள்' வந்தது.

இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் இயக்குனர் பிரேம்குமார் கலந்து கொண்ட விவாத நிகழ்வு ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது.

அதில் பிரேம்குமார் பேசுகையில், “தமிழ் சினிமாவில் 'நெகட்டிவ் விமர்சனங்கள்' வருவது தற்போது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நாளுக்கு நாள் அது அதிகமாகி வருகிறது. முன்பெல்லாம் அவர்களை விமர்சகர்கள் என்று அழைத்தோம், ஆனால், இப்போது அப்படியில்லை. அது வேறு விதமாக மாறிவிட்டது. அவர்களது 'டார்கெட்' வேறு ஒன்றாக இருக்கிறது. எல்லாரையும் அப்படி சொல்லவில்லை.

அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நெகட்டிவ்வாக உள்ளது. படம் வெளியான முதல் வார வசூலை அவர்கள் 'டார்கெட்' வைக்கிறார்கள். அதன்பின் அந்த தயாரிப்பாளர் அவரது அடுத்த படத்திற்கு அந்த விமர்சகரைத் தேடிப் போகிறார். பணம் கொடுத்து விமர்சனம் செய்வது தற்போது 90 சதவீதம் ஆகிவிட்டது. நேர்மையான விமர்சனம் செய்பவர்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு படத்தை சரியாக விமர்சனம் செய்யும் தகுதியும் இல்லை. ஒன்றிரண்டு பேர்தான் நல்ல விமர்சனம் தருகிறார்கள். இப்படியான விமர்சனங்களை வைத்துத்தான் ரசிகர்களும் படத்திற்குப் போகலாமா வேண்டாமா என முடிவு செய்கிறார்கள்.

தமிழகத்தில் இது பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், அடுத்த மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இது மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி தயாரிப்பாளர்கள் மாநிலங்கள் கடந்து ஒன்றிணைந்து நிவர்த்தி செய்ய வேண்டும்,” என்று பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !