பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார்
பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87 வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் காலமானார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். கடைசியாக தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது வீட்டிலேயே காலமானார். சரோஜாதேவிக்கு ஸ்ரீ ஹர்ஷா என்ற கணவர் இருந்தார். 1986லேயே அவர் மறைந்துவிட்டார். புவனேஷ்வரி, இந்திரா என இரு மகள்களும், கவுதம் ராமச்சந்திரன் என்ற மகனும் உள்ளனர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும், தமிழகம் உள்ளிட்ட பிறமாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார்.
சரோஜாதேவியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரபலங்களும், திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்த வீட்டில் குவிந்தனர்.
செவ்வாய் அன்று இறுதிச்சடங்கு
நடிகை சரோஜா தேவியின் இறுதிச்சடங்கு நாளை(ஜூலை 15) செவ்வாய் அன்று பெங்களூருவில் அரசு மரியாதை உடன் நடக்கிறது.
சோகத்திலும் ஒற்றுமை
சரோஜாதேவி நடித்த பல பாடல்களுக்கு ‛மெல்லிசை மன்னர்' எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அவரின் நினைவு தினம் இன்று(ஜூலை 14). இந்த நாளிலேயே சரோஜாதேவியும் மறைந்தது திரை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல 2015ம் ஆண்டில் எம்எஸ்வி இறக்கும் போது அவரது வயது 87. இன்று மறைந்த சரோஜாதேவியின் வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கள் தானம்
மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழக்கப்பட்டன. இதற்காக மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக எடுத்து சென்றனர். அந்த கண்கள் இரு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இருவரின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளார் சரோஜாதேவி.