அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் பெரிய வெற்றி அடைய அவருடைய மார்க்கெட்டும் விரிவானது. அந்த படம் 350 கோடி வரை வசூலித்ததால், அவரை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் துடிக்கிறார்கள். இப்போது முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என பலருக்கும் டவுட் இருந்தது.
அதை வெங்கட்பிரபு தெளிவுப்படுத்தியுள்ளார். அடுத்து தனது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. அதற்கடுத்து குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்திலும், அதற்கடுத்து புஷ்கர் காயத்ரி இயக்கத்திலும் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். விநாயக் இயக்கத்தில் தான் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். அந்த படத்தில் அவர் அப்பாவாக நடிக்க இருந்த மோகன்லால் கால்ஷீட்டில் பிரச்னை என்பதால், வெங்கட்பிரபு படத்துக்கு மாறிவிட்டார் என்று தகவல் வருகிறது.
இந்த 3 படங்கள் முடிவதற்குள் சிவகார்த்திகேயன் சம்பளம் 100கோடியை தொட்டு விடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியிலும் சிவகார்த்தியேனுக்கு ஓரளவுக்கு பிஸினஸ் இருப்பதால், அவரை வைத்து படம் தயாரித்தால் ரிலீசுக்கு முன்பே கணிசமான லாபம் பார்த்துவிடலாம், படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் முடித்தால் இது சாத்தியம் என கோலிவுட்டில் கணக்கு சொல்லப்படுகிறது