பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர்
1963ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான படம் 'பார் மகளே பார்'. தமிழில் நடத்தப்பட்டு வந்த 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகம், அதே பெயரில் சினிமா ஆனது. சிவாஜியுடன் சவுகார் ஜானகி, முத்துராமன், விஜயகுமாரி, ஏ.வி.எம் ராஜன், புஷ்பலதா, குமாரி ருக்மணி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா, சோ, மனோரமா என பலர் நடித்தனர்.
படத்தை இயக்கிய பீம்சிங் நாடகத்தில் இருந்து பல மாற்றங்களை செய்தார். படத்தின் தலைப்பையும் 'பெற்றால்தான் பிள்ளையா' என்பதை மாற்றி தனது ப வரிசை டைட்டிலாக வைக்க வேண்டும் என்பதற்காக 'பார் மகளே பார்' என்று மாற்றினார். படத்தில் இடம்பெறும் 'பார் மகளே பார்' பாடல் மிகவும் பிடித்து விட்டதால் அதையே தலைப்பாகவும் வைத்தார்.
1966ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் உருவான படம் 'பெற்றால்தான் பிள்ளையா'. இந்த படத்தில் எம்ஜிஆருடன் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, அசோகன், தங்கவேலு, நம்பியார் உள்பட பலர் நடித்தனர். இந்த படத்திற்கும் பல தலைப்புகள் யோசிக்கப்பட்ட பிறகு எம்ஜிஆர்தான் இந்த தலைப்பை வைத்தார். இந்த படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார்கள்.