தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமானது. கோவை, உடுமலை, சிங்கபூர், மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு ஏப்ரலில் முடிவடைந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்படம் செப்டம்பர் 18ம் தேதியன்று வெளியாகும் என மே மாதம் அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப் போக உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளான நேற்று தயாரிப்பு நிறுவனம் அவருக்கு வாழ்த்து சொல்லி போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் படத்தின் வெளியீட்டுத் தேதி இல்லாமல் இருந்ததால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
சில வாரங்கள் தள்ளிப் போகும் என்றும், இல்லை, அடுத்த வருடம் தள்ளிப் போகும் என்றும் தகவல் பரவி வருகிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் உடனடியாக அறிவித்தால்தான் வெளியீடு பற்றிய தகவல்கள் நிற்கும்.