பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண்
கேம் சேஞ்சர் படத்தை அடுத்து புஜ்ஜி பாபுவின் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். இந்தப் படத்தின் கதாபாத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை நியமித்திருக்கிறார் ராம் சரண். அதோடு, கரடு முரடான கிராமத்து கதாபாத்திரத்தில் தன்னை வெளிப்படுத்த தாடி மற்றும் நீண்ட தலைமுடியை அவர் வளர்த்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ள நிலையில் தனது உடல் தோற்றத்தை மாற்றும் முயற்சியில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஜிம்மில் தீவிரமான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வரும் ராம் சரண் அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛மாற்றம் தொடங்குகிறது. தூய மன உறுதி, உண்மையான மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.
ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. 2026ம் ஆண்டு மார்ச் 27ல் இப்படம் திரைக்கு வருகிறது.