உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / “ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப்

“ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப்

மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் மிகப்பெரிய வெற்றி குறித்து பெரிய அளவில் விளக்கம் தேவையில்லை. அந்த அளவிற்கு மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான இந்த இரண்டு பாகங்களும் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் கூட ரீமேக்காகி வரவேற்பை பெற்றன. இதில் முதல் பாகம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாம் பாகம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டதாகவும் மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு துவங்கி ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்தில் கூறியிருந்தார். அதேசமயம் திரிஷ்யம்-3 ஹிந்தி ரீமேக்கை முன்கூட்டியே துவங்க அஜய் தேவகன் ரொம்பவே துடிப்புடன் இருந்தார். ஒருவேளை ஜீத்து ஜோசப் ஸ்கிரிப்ட் பணிகளை முடிக்க தாமதமானால் முன்கூட்டியே தங்களது படப்பிடிப்பை ஆரம்பிக்கும் எண்ணத்திலும் இருந்தார். ஆனால் ஜீத்து ஜோசப் அவர்களுக்கு சட்டரீதியாக சில நிபந்தனைகளை விதித்து அந்த எண்ணத்திற்கு தடை போட்டார்.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது ஜீத்து ஜோசப் பேசுகையில், “எனக்கு இந்த படத்தின் கதை மற்றும் கிளைமாக்ஸ் உருவாக்கத்தில் மலையாளம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டரீதியாக எங்கள் பாயிண்டுகளை எடுத்து வைத்ததும் ஹிந்தி குழுவினர் அமைதியாக பின்வாங்கி விட்டனர்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Columbus
2025-07-22 11:20:42

Ajay Devgan is keen in simultaneous production of Malayalam and Hindi version. Otherwise some telugu producer acquires the hindi dubbing rights and releases same in the North leading to huge loss for the Hindi remake producer.