உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / “உங்களுக்கு செம தைரியம் தான்” : மோகன்லாலுக்கு குஷ்பூ பாராட்டு

“உங்களுக்கு செம தைரியம் தான்” : மோகன்லாலுக்கு குஷ்பூ பாராட்டு

நகை வாங்கும் ஆர்வம் பெண்களுக்கு மட்டும் தான் என யார் சொன்னது ? ஆண்களுக்கும் அதே போன்ற நகை ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக சமீபத்தில் கேரள நகைக்கடை விளம்பரம் ஒன்று வெளியானது. இதில் நடித்திருந்தவர் வேறு யாருமல்ல.. சாட்சாத், நடிகர் மோகன்லாலே தான். அவருடன் இணைந்து இந்த விளம்பரத்தில் நடித்ததுடன் இதை இயக்கியும் இருந்தார் சமீபத்தில் வெளியான தொடரும் படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா..

இந்த விளம்பரத்தில் மோகன்லால் நகைக்கடை விளம்பரத்திற்காக நடிக்க வருகிறார். அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் அழைத்து செல்கிறார்கள். அந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகை நகையை அணிந்து பார்ப்பதை பார்க்கும் மோகன்லால் மற்றவர்கள் அசந்த நேரத்தில் அதை கையில் எடுத்துக்கொண்டு கேரவனுக்கு செல்கிறார். இங்கே நகையை காணோம் என்று பரபரப்பு ஏற்பட்டு தேடுகிறார்கள். இந்த தகவலை மோகன்லாலுக்கு தெரிவிக்கலாம் என்று நடிகர் பிரகாஷ் வர்மா அவரது கேரவனுக்கு செல்கிறார். அங்கே மோகன்லால் அந்த நகையை கழுத்தில் தான் அணிந்தபடி கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நகையைப் பார்த்தால் யாருக்கு தான் ஆசை வராது என்று வசனமும் பேசுகிறார் என்பதாக அந்த விளம்பரம் முடிகிறது.

மோகன்லால் இப்படி நகையை அணிந்து பெண்களுக்கே உரிய நளினத்துடன் அந்த காட்சியில நடித்ததை பார்த்து நடிகை குஷ்பூவிடமிருந்து முதல் பாராட்டு மோகன்லாலுக்கு பறந்துள்ளது இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ள குஷ்பூ, “என்ன ஒரு அருமையான கமர்சியல் விளம்பரம். இதில் நடிப்பதற்கு தனி கட்ஸ் வேண்டும். நமது பவர்ஹவுஸ் மோகன்லால் இதை அருமையாக செய்துள்ளார். ஆண்களுக்குள் இயற்கையாகவே மறைந்திருக்கும் பெண் தன்மையை அழகாக வெளிக்கொண்டு இருக்கிறார்.. மோகன்லால் சார்.. நீங்கள் மட்டுமே இது போன்று சரியாக செய்ய முடியும்.. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.. இப்படி ஒரு வித்தியாசமான ஐடியாவுக்காக இயக்குனர் பிரகாஷ் வர்மாவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !