பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை
1980களில் தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, அம்பிகா, ராதா போன்றவர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் இவர்களுக்கு நிகராக கன்னட சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் பாவ்யா.
அன்றைக்கு இருந்த முன்னணி கன்னட நடிகர்கள் இவரது தேதிக்காக காத்திருந்தார்கள். விஷ்ணுவர்த்தன் உடனும், அம்பரீஷ் உடனும், ராஜ்குமாருடனும், அதிக படங்களில் நடித்தார். 100க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்த பாவ்யா இரண்டு தமிழ் படங்களில் நடித்தார்.
1985ம் ஆண்டு வெளிவந்த ' கீதாஞ்சலி' படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை கே.ரங்கராஜ் இயக்கினார். அதே ஆண்டில் 'ஜனனி' படத்தில் உதயகுமார் என்ற புதுமுகம் ஜோடியக நடித்தார். இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றாலும் அவர் கைவசம் ஏராளமான கன்னட படங்கள் வைத்திருந்ததால் தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.
ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும் குணசித்ர வேடங்களில் நடித்த பாவ்யா, பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.