உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025

ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025

2025ம் ஆண்டில் வெளியாகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடக்கப் போவது உறுதி. அது 250ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ள 8 நேரடி தமிழ்ப் படங்களுடன் சேர்த்தால் இந்த வருட படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துவிடும். ஆகஸ்ட் 1ம் தேதியன்று லேட்டஸ்ட் தகவல்படி, “அக்யூஸ்ட், போகி, பிளாக்மெயில், ஹவுஸ்மேட்ஸ், மிஸ்டர் ஜு கீப்பர், சென்னை பைல்ஸ் முதல் பக்கம், சரண்டர், உசுரே,” ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளன.

2025ம் ஆண்டின் 50வது பட வெளியீடு மூன்று மாதங்களிலும், 100வது பட வெளியீடு ஐந்து மாதங்களிலும், 150வது பட வெளியீடு ஏழு மாதங்களிலும் நடைபெறுகிறது. அடுத்த ஐந்து மாதங்களில் 100 படங்கள் வெளிவந்தால் 250 படங்கள் வரை இந்த ஆண்டு வெளியாகிவிடும். தியேட்டர்களுக்கு மக்கள் வரத் தயங்கி வரும் இந்தக் காலத்தில் படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, மக்கள் வருகிறார்களோ இல்லையோ, வாராவாரம் படங்கள் வெளியாவது குறையவில்லை. வரும் வாரத்தில் 8 படங்கள் என்றால் ஒரு படத்திற்கு 100 தியேட்டர்கள் என்றால் கூட இருக்கும் 900 ரிலீஸ் தியேட்டர்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் தியேட்டர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால், அது இன்னும் குறையும். படத்தை வெளியிட்டுவிட்டு ஓடிடி வியாபாரத்தை முடித்துவிடுவோம் என்ற எண்ணத்தில் சிலர் வெளியிடுவதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !