உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம்

பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம்

அம்மா சென்டிமெண்ட் படங்களுக்கு மினிமம் கியாரண்டி பிற்காலத்தில் உருவானது. எம்ஜிஆரின் பல வெற்றிகளுக்கு காரணம் அவர் படத்தில் இருந்த அம்மா சென்டிமெண்ட்தான். ஆரம்ப காலகட்டடத்தில் வெளியான புராண மற்றும் சரித்திர படங்களில் அம்மா சென்டிமெண்ட் நிறையவே இருந்தது. ஆனால் சமூக படங்களில் அம்மா சென்டிமெண்டை வைத்து பெரிய வெற்றி பெற்றது 1952ல் வெளிவந்த 'அம்மா' என்ற படம்.

1950ம் ஆண்டு எல்.வி.பிரசாத் தெலுங்கில் இயக்கிய படம் 'சாவுகர்'. இந்த படம் 'அம்மா' என்ற பெயரில் மலையாளத்தில் தயாரானது. ஜெய்ரஸ் பால் விக்டர் என்பவர் இயக்கினார். இதே படம் அதே பெயரில் தமிழிலும் தயாரானது வேம்பு என்பவர் இயக்கினார். எழுத்தாளர் சாண்டில்யன் தமிழ் வசனங்களை எழுதினார்.

திக்குரிச்சி சுகுமாறன், லலிதா, பி.எஸ்.சரோஜா, ஆரன்முல பொன்னம்மா, எம்.என்.நம்பியார், டி.எஸ்.துரைராஜ் உள்ளிட்ட தமிழ், மலையாள கலைஞர்கள் இணைந்து நடித்தனர். வி.தட்சிணாமுர்த்தி இசை அமைத்தார். படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றது. அப்போது புகழ்பெற்றிருந்த இந்தி பாடல்களின் மெட்டில் பாடல்கள் உருவாகி இருந்தது.

தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும்கூட அவர்களுக்காக எப்படிப்பட்ட தியாக வாழ்க்கையை அம்மா வாழ்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த அம்மா கேரக்டரில் நடித்த ஆரன்முல பொன்னம்மாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு அவர் அம்மா நடிகையாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாகவே நடித்தார். ஏற்கெனவே தெலுங்கு மொழியில் வெற்றி பெற்ற இந்த படம், மலையாளம், தமிழிலும் வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !