உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில்

கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில்

பாலசுந்தரம் இயக்கியுள்ள ராகு கேது என்ற பக்தி படத்தில் ஸ்வர்பானு என்ற அசுரனை ராகு, கேதுவாக மாற்றும் துர்க்கை அம்மன் வேடத்தில் நடித்து இருக்கிறார் நடிகை கஸ்துாரி. கவர்ச்சி நடிகை கடவுளாக நடிக்கலாமா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில், ''பட்டினத்தில் பூதம் படத்தில் கவர்ச்சியாக நடித்த கே.ஆர்.விஜயாதான் ஒரு கட்டத்தில் ஏகப்பட்ட படங்ளில் அம்மனாக நடித்தார். ஸ்ரீவித்யா, ஜெயலலிதா, ஸ்ரீபிரியா நடிச்சு இருக்காங்க. ஏன், நயன்தாரா, மீனா, ரம்யா கிருஷ்ணன், ரோஜா நடிக்கலையா? அவர்களிடம் இந்த கேள்வி கேட்கப்படுமா? என்னை பொறுத்தவரையில் இரண்டும் நடிப்புதான்.

கடவுளாக நடிப்பது என்பது வரம். அதிலும் இந்த படத்தில் வரம் கொடுக்கும் துர்க்கையாக நடித்து இருக்கிறேன். அந்த காட்சியில் நடிக்கும்போது அவ்வளவு சந்தோசப்பட்டேன். என்ன, நான் வேகமாக பேசுவேன். கடவுள் கேரக்டர், புராண படம் என்பதால் மெதுவாக பேசினேன். அந்த சமயத்தில் நான் நிஜ வாழ்க்கையில் வரமாக, கடனாக கொடுத்து காணமல் போன கடன்கள், அதனால் முறிந்த நட்பும் நினைவுக்கு வந்தது. நானும் ராகு திசையால் பாதிக்கப்பட்டு ஜெயிலுக்கு போயிருக்கிறேன். இந்த படத்தில் ராகு கேது பற்றியும், பரிகாரங்கள் பற்றியும் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு பிரச்னைகள் வந்தபோது, நான் உள்ள போனேன். அப்போது திருநாகேஸ்வரம் தான் போயிட்டு வந்தேன். நான் நிஜ வாழ்க்கையில் சைவம். அடிக்கடி விரதம் இருப்பேன், ஏகாதசி போன்ற நாட்களில் நீர் கூடி குடிக்கமாட்டேன். என் வாழ்க்கையே கொஞ்சம் ஆச்சாரமானது'' என்றார் கஸ்தூரி.

அவரிடம் அடுத்த ஆண்டு தமிழக மக்களுக்கு ராகு கேது பலன் எப்படி இருக்கும். அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறதே என நிருபர்கள் கேட்க ''பொதுவாக சூரியன் மீது ராகு கேது நிழல் விழும், இந்த படத்தில் தங்களுக்கு எதிராக இருந்த சூரியனை என்ன செய்யலாம்னு ராகு கேது பேசுவாங்க, அது நடக்கும். அடுத்து இந்த குழு இயக்கும் முருகர் படத்தில் பார்வதியாக நடிக்க ஆசைப்படுகிறேன்'' என்று மறைமுக சொல்லிவிட்டு சிரித்தார் .

இந்த படத்தை நாடக காவலர் என்று அழைக்கப்படும் மறைந்த ஆர்.எஸ்.மனோகர் குழுவில் இருந்த பாலசுந்தரம் இயக்க, அவர் அணியில் இருந்து ஏகப்பட்ட புராண, பக்தி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய கே.பி.அறிவானந்தம் இந்த படத்துக்கும் கதை எழுதி, ஜோசியராக முக்கியமான வேடத்திலும் நடித்து இருக்கிறார். இதில் சிவனாக நடித்து இருப்பவர் சமுத்திரக்கனி, இயக்குனரே முக்கிய கேரக்டரான அசுரன் ஸ்வர்பானுவாக வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !