3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு
பழம்பெரும் நடிகை மற்றும் பாடகி கே.பி.சுந்தராம்பாள், அவ்வையாராக நடித்து பெரும்புகழ் பெற்றார். தனது கணீர் குரலால் இசைத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கே.பி.சுந்தராம்பாள் பிறந்த ஊர். 1968ம் ஆண்டு கொடுமுடியில் தனது பெயரில் கே.பி.எஸ். என்ற திரையரங்கை கட்டினார். இந்த தியேட்டரின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினார் கே.பி.எஸ்.
1969ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி இதன் திறப்பு விழா நடந்தது. இதனை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும், எம்ஜிஆரும் திறந்து வைத்தனர். ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி வைத்தார். முன்னதாக கே.பி.சுந்தராம்பாள் வீட்டில் நடந்த விருந்தில் அனைவரும் கலந்து கொண்டனர். தனது வீட்டில் இருந்து தியேட்டருக்கு மூவரையும் திறந்த ஜீப்பில் அழைத்துச் சென்றார் கே.பி.சுந்தராம்பாள்.
2020-ம் ஆண்டு இந்த தியேட்டர் கொரோனாவால் மூடப்பட்டது. 51 ஆண்டுகள் திரைப்படங்கள் திரையிடப்பட்டு பொன்விழா கண்ட கே.பி.எஸ் திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.