உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கூலி, வார் 2' டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்கு திரையுலகினர், ரசிகர்கள் எதிர்ப்பு

'கூலி, வார் 2' டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்கு திரையுலகினர், ரசிகர்கள் எதிர்ப்பு

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் புதிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள இரண்டு மாநில அரசுகளும் அனுமதி அளிப்பது வழக்கம். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அந்த உயர்வு அதிகமாகவே இருக்கும். இப்படி டிக்கெட் கட்டணங்களை உயர்த்தித்தான் தங்களது படங்கள் 500 கோடி, 1000 கோடி வசூலித்தது என சொல்லிக் கொள்கிறார்கள்.

நாளை மறுதினம் ரஜினிகாந்த், நாகார்ஜுனா நடித்துள்ள தமிழ்ப் படமான 'கூலி', ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ஹிந்திப் படமான 'வார் 2' ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கான முன்பதிவு இன்னும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஆரம்பமாகவில்லை.

நேரடி தெலுங்கு படங்களைப் போல இந்த டப்பிங் படங்களுக்கும் டிக்கெட் கட்டண உயர்வுக்காக விண்ணப்பம் செய்துள்ளார்களாம். இது தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் படங்களுக்கு எதற்காக டிக்கெட் கட்டண உயர்வு தர வேண்டும் என்று சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருந்தாலும் அனுமதி அளிக்கக் கூடாது என்கிறார்களாம்.

சென்னை, மும்பையை விட ஐதராபாத், விசாகப்பட்டிணம் என தெலுங்கு நகரங்களில் டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஏன் அனுமதி தர வேண்டும் என சமூக வலைத்தளங்களிலும் சில தெலுங்கு சினிமா ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் அனுமதி அளிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !