உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான்

ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான்

இந்தியத் திரையுலகத்தில் தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்று சாதித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஹிந்தியிலிருந்து நடிகைகள் மட்டும்தான் இங்கு அதிகமாக வந்து சாதித்துள்ளார்கள். மற்றவர்கள் எப்போதோ ஒரு முறை வந்து போவார்கள்.

தமிழ் சினிமாவில் ஹிந்தி நடிகர்கள் வருவது எப்போதாவது நடக்கும். இதற்கு முன்பு அப்படி ஒரு சில முறை நடந்துள்ளது. கமல்ஹாசன் நடித்து 2000ம் வருடத்தில் தமிழ், ஹிந்தியில் தயாரான படம் 'ஹே ராம்'. அப்படத்தில் ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்ததாக ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி 2001ல் ஷாம், சிம்ரன், ஜோதிகா நடித்து வெளிவந்த '12 பி' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

அதற்கடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடம் 2024ம் வருடத்தில் அக்டோபர் மாதம் வெளிவந்த 'வேட்டையன்' படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கடுத்து நவம்பர் மாதம் வெளிவந்த 'கங்குவா' படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்தார். மேலே குறிப்பிட்ட நான்கு ஹிந்தி நடிகர்களும் நடித்த படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இன்று வெளியான 'கூலி' படத்தில் ஹிந்தி நடிகர் அமிர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஓபனிங் வசூல் சாதனை புரியும் அளவில் உள்ளதால், முந்தைய ஹிந்தி நடிகர்களின் தோல்வி ராசியை அமிர்கான் மாற்றி வைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !