ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல்
ஒரு படத்தின் வரவேற்புக்கு பாடல்கள் மிகவும் முக்கியம். இன்றைய இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ஒரு இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார். அவர் இசையமைக்கும் படங்களுக்கு ஆடியோ உரிமை உடனடியாக பெரிய விலைக்கு விற்கப்படுவதாகச் சொல்கிறார்கள். அந்தப் பாடல்கள் யு டியூப் தளங்கள், சமூக வலைதளங்கள், ஆன்லைன் பாடல் தளங்கள் ஆகியவற்றில் அதிகமாக ரசிக்கப்படுவதால் அதன் மூலம் வருவாயும் வருகிறது.
'கூலி' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற 'மோனிகா' பாடலுக்கு பூஜா ஹெக்டே சிறப்புத் தோற்றத்தில் நடனமாடி இருந்தார். அந்தப் பாடலில் அவருடைய நடனமும், உடன் சேர்ந்து நடனமாடிய சவுபின் ஷாகிர் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்தது.
கடந்த வாரம் இந்தப் பாடலைப் பற்றி கேள்விப்பட்ட மோனிகா பெலூசி பாராட்டியதாக ஒரு பேட்டியில் பூஜாவிடம் தெரிவித்திருந்தார்கள். அப்போது அந்தப் பாடல் 68 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. படம் வெளியாவதற்கு சில நாட்கள் முந்தைய நிலவரம் அது. படம் வெளியான பின் அந்தப் பாடலைப் பலரும் யு டியூப் தளத்தில் பார்த்துள்ளார்கள்.
ஆறே நாட்களில் 17 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் பெற்று தற்போது 85 மில்லியனைக் கடந்துள்ளது. விரைவில் 100 மில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.