வாசகர்கள் கருத்துகள் (1)
Nice of Selvamani to remember late Vijaykant.
மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த அவரது 100வது படமான ‛கேப்டன் பிரபாகரன்', 34 ஆண்டுகளுக்குபின் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆகிற நிலையில், அந்த படம் குறித்து பல்வேறு புது தகவல்களை பகிர்ந்து வருகிறார் அந்த பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. அவர் கூறியது, ‛‛கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம் பெற்ற அந்த ரயில், குதிரை சேசிங் சண்டை இன்றும் பேசப்படுகிறது. ஷோலே, தி கிரேட் ரயில் ராபரி பாதிப்பில், அந்த மாதிரி குதிரை சண்டைக்காட்சி இருந்தால் நல்லா இருக்கணும்னு யோசித்தேன்.
படத்தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரிடம் 25 குதிரை, ஒரு ரயில் இருந்தால் அந்த சண்டைக்காட்சியை சிறப்பாக எடுக்கலாம் என்றேன். அவரோ 100 குதிரை தருகிறேன் என்றார், நான் சந்தோஷமாகிவிட்டேன். ஆனால், 100 குதிரை ஓடும் அளவுக்கு, ரயில்வே டிராக்குடன் ஒரு பெரிய இடம் தேவைப்பட்டது. பல இடங்களில் தேடி கடைசியில் ஆண்டிப்பட்டி கணவாய் ஏரியாவில் எடுத்தோம். அந்த சண்டைக்காட்சியை வெறும் 4 நாளில் முடித்தோம். சூப்பர் சுப்பராயன், அவர் சிஷ்யர் ராக்கி ராஜேஷ் எடுத்து கொடுத்தனர்.
அதேபோல் இன்றும் ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் கொண்டாடப்படுகிறது. முதலில் படத்துக்கு பாடலே இல்லை. இளையராஜா சார் 2 பாடல் கொடுத்தார்.
இந்த சிச்சுவேசனுக்கு முதலில் வேறு பாடல் கொடுத்தார். எனக்கு அது பிடிக்கவில்லை. அவரிடம் போனில் பேசினேன். எனக்கு ஷோலே மாதிரி படத்துக்கு பாடல் வேண்டும் என்றேன், அவர் கோபப்பட்டார். ஆனாலும், ஒரு நாளில் அவரே பாடலாசிரியர் பிறைசூடனிடம் சிச்சுவேசன் சொல்லி ஸ்வர்ணாலதாவை வைத்து பாட வைத்து பாடலை ரெக்கார்டு செய்து, மறுநாளே பிளைட்டில் கேசட் அனுப்பினார்.
அந்த பாடலை கேட்டவுனே டான்ஸ் மாஸ்டர் சலீம் உட்பட பலரும் கைதட்டினர். இன்றும் அந்த பாடல் பேசப்பட இளையராஜா, ரம்யா கிருஷ்ணன் டான்ஸ் தான் காரணம். புஷ்பா படத்தின் சில காட்சிகள் கேப்டன் பிரபாகரன் மாதிரி இருக்குதே, நீங்க படக்குழுவிடம் பேசலையா என்று சிலர் கேட்டார்கள். நான் ஷோலே பாதிப்பில்தான் கேப்டன் பிரபாகரன் எடுத்தேன். அவர்களுக்கு இந்த படம் பாதிப்பு என நினைத்து விட்டேன். நான் விஜயகாந்தால் வளர்ந்தேன். அவர் மகன் சண்முகபாண்டியனை வைத்து கேப்டன் பிரபாகரன் 2 எடுக்க ஆசைப்படுகிறேன். அது, அவருக்கு செய்யும் நன்றி கடன்'' என்றார்.
Nice of Selvamani to remember late Vijaykant.