‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன்
கன்னட திரையுலகில் கடந்த மாதம் ‛சூ ப்ரம் சோ' என்கிற படம் வெளியானது. ஜே.பி துமிநாடு என்பவர் இயக்கிய இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆறு கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் வெளியான 25 நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இதன் ரீமேக் உரிமை குறித்து மற்ற மொழிகளில் இருந்து பார்வையை திருப்பி உள்ளனர். தமிழில் இதன் ரீமேக் உரிமை ஏற்கனவே வாங்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்குவதற்காக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் காய் நகர்த்தி வருகிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் ஜே.பி துமிநாடுவை தொடர்பு கொண்டு பேசிய அஜய் தேவ்கன் இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்காக பக்காவான முழு ஸ்கிரிப்ட்டுடன் தன்னை வந்து சந்திக்கும்படி கூறியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாகவே சீரியசான ஆக்சன் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அஜய் தேவ்கன், ஹாரர் காமெடி படமான ‛சூ ப்ரம் சோ' படத்தை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவதும் இன்னொரு ஆச்சரியமான விஷயம் தான்.