உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் மதராஸி. இப்படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது மதராஸி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் முருகதாஸ். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது முதல் பட ஹீரோவான அஜித் குமாரை பற்றி ஒரு முக்கிய விஷயத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், பெரும்பாலான நடிகர்கள் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் தோற்றம், உடைகளை எல்லாவற்றையும் பார்ப்பார்கள். ஆனால் அஜித்குமார் திறமை, நம்பிக்கைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். அப்படித்தான் எனக்கு அவர் தீனா படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு கஜினி படத்தை அவரை வைத்து தான் இயக்கினேன். அந்த படத்திற்கு மிரட்டல் என்று அப்போது டைட்டில் வைத்திருந்தேன். ஆனால் இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில், வேறு படங்களில் கமிட்டாகி இருந்ததால் மிரட்டல் படத்தில் அஜித்தால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதனால்தான் அதன்பிற்கு அந்த படத்தின் டைட்டிலை கஜினி என்று மாற்றி சூர்யாவை நடிக்க வைத்தேன்.

மிரட்டல் படத்தில் நடிக்க தயாரானபோது, தான் சிக்ஸ் பேக் வைத்து நடிப்பதாக கூறினார் அஜித் குமார். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் என்ற கான்சப்ட் கிடையாது. அப்போதே அஜித்குமார் அப்படி நடிப்பதாக என்னிடத்தில் சொன்னார். அப்படி அவர் சொன்னதை வைத்துதான் பின்னர் கஜினி படத்தில் சூர்யாவை சிக்ஸ் பேக் கெட்டப்பில் நடிக்க வைத்தேன். அஜித் சொன்ன நிறைய விஷயங்களை கஜினி படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் பயன்படுத்தினேன். அமீர்கானையும் சிக்ஸ் பேக்கில் நடிக்க வைத்தேன் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2025-08-24 09:28:30

இனி எப்படி புகழ்ந்தாலும் அஜித் வாய்ப்பு தரமாட்டார் உமக்கு