உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா

ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‛குபேரா' படத்தில் தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா கிட்டத்தட்ட ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‛கூலி' திரைப்படத்தில் இவரது ஸ்டைலிஷான வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கூட 1989ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‛கீதாஞ்சலி' மற்றும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‛சிவா' என இரண்டு படங்கள் தான் அவருக்கு இளம் ரசிகர்களை தேடி தந்ததுடன் முன்னணி ஹீரோ அந்தஸ்துக்கும் உயர்த்தின. குறிப்பாக மணிரத்னம் படத்தில் நடிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல முன்னணி நடிகர்கள் இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நாகார்ஜுனா.

இது குறித்து அவர் கூறும்போது, “ஆரம்பத்தில் சில படங்களில் நான் நடித்தாலும் கூட எனக்கு ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது. அந்த சமயத்தில் தான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படம் பார்த்தேன். எப்படியாவது அவர் டைரக்சனில் நடித்து விட வேண்டும் என திட்டமிட்டு சென்னைக்கு வந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே காத்திருப்பேன்.

அதிகாலையில் அவர் தினசரி நடை பயிற்சிக்காக செல்லும்போது கூடவே சென்று அவரிடம் என்னை வைத்து ஒரு படம் இயக்குங்கள் என்று கோரிக்கை வைப்பேன். ஆரம்பத்தில் என்னிடம் கட் அண்ட் ரைட்டாக பேச முடியாமல் மெதுவாக பேசி என்னை தவிர்க்க நினைத்தார் மணிரத்னம். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் அவரை பின் தொடர்ந்ததில் ஒருவழியாக அவர் என்னை வைத்து படம் இயக்க ஒப்புக்கொண்டார்.. அந்த படம் தான் கீதாஞ்சலி. அந்த படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரயன், வேலந்தாவளம்
2025-08-24 15:47:45

கீதாஞ்சலி தமிழில் இதயத்தை திருடாதே