ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை
ஏஐ தொழில்நுட்டம் தற்போது சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'நைசா' என்ற முதல் ஏஐ தொழில்நுட்ப படம் சமீபத்தில் வெளியானது. கன்னடத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்கோத்ரா 'சிரஞ்சீவி அனுமன்' என்ற ஏஐ தொழில்நுட்ப படத்தை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார். இதற்கு பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏ.ஐ. தொழில்நுட்ப திரைப்படங்கள் எதிர்காலத்தில், சினிமாவில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும். இப்படிப்பட்ட ஏ.ஐ. திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
இதை எதிர்க்கும் வகையில், ஏஐ படங்களை விட்டு நடிகர்கள் வெளியேற வேண்டும். கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பதுதான் இதுபோன்ற நிறுவனங்களின் பணி. ஆனால் தற்போது அவர்களின் இலக்கு பணத்தின் மீது மட்டும்தான் உள்ளது. என்று கூறியிருக்கிறார்.