கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இவர் அதற்கு முன்னதாக சவுதி வெள்ளக்கா மற்றும் ஆபரேஷன் ஜாவா என இரண்டு சிறிய பட்ஜெட் படங்களை இயக்கியிருந்த நிலையில் தொடரும் படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக கொடுத்திருந்தார். அடுத்ததாக அவர் தமிழில் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தனது புதிய படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள தருண் மூர்த்தி அது தன்னுடைய படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஓணம் பண்டிகையன்று இந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை துவங்கி விட்டேன். என்னுடைய சில பெர்சனலான சந்திப்புகள் மற்றும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்குகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இது எந்த படத்திற்கான இரண்டாம் பாகம் என்பதை சஸ்பென்ஸாக சொல்லாமல் விட்டுள்ளார் தருண் மூர்த்தி.. ரசிகர்கள் அனைவருமே இது தொடரும் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் அதற்கு முன்னதாக அவர் சைபர் க்ரைமை மையப்படுத்தி இயக்கிய ஆபரேஷன் ஜாவா படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போகிறார் என்றும் மாறி மாறி தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.