ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து 13 திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். ரஜினி அறிமுகமான ‛‛அபூர்வ ராகங்கள் தொடங்கி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கு, நட்சத்திரம், தில்லு முல்லு'' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்கள். நினைத்தாலே இனிக்கும்(1979) படத்துக்குபின் இருவரும் இணைந்து ஹீரோக்களாக நடிக்கவில்லை.
இனி அவரவர் வழியை பார்ப்போம் என பேசி பிரிந்துவிட்டார்கள். ரஜினி நடித்த தில்லு முல்லு(1981) படத்தில் கவுரவ வேடத்தில் கமல்ஹாசன் நடித்தார். அதுவே இணைந்து நடித்த கடைசி படம்.இந்நிலையில், லோகே ஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கப்போகிறார்கள். கமலின் ராஜ்கமல்பிலிம்ஸ். ரெட் ஜெயன்ட் இணைந்து அந்த படத்தை தயாரிக்கப்போகிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால், இரண்டு தரப்பும் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. லோகேசும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், துபாயில் நடந்து வரும் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினியுடன் இணைந்து படம் பண்ணுவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரான நடிகர் சதீஷ், உங்களும் ரஜினிகாந்த் இணையும் தரமான சம்பவம் நடக்கப்போவதாக கேள்விப்பட்டோம். அது உண்மையா என கமலிடம் கேட்க, அவரோ ''தரமான சம்பவமா என்பதை படம் பார்த்துவிட்டு ரசிகர்தான் சொல்ல வேண்டும். தரம் எப்படி இருக்கிறது என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். நாங்கள் தருகிறோம். படம் நடப்பதுக்கு முன்பே தரமானது என்று சொல்லக்கூடாது. திடீரென தரதரவென இழுத்துவிடுவார்கள். படம் செய்துவிட்டு காண்பிப்போம்.
நாங்கள் இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. முன்பு நாங்களே விரும்பி பிரிந்து இருந்தோம். ஒரு பிஸ்கட்டை பாதி, பாதியாக கொடுத்து கொண்டு இருந்தார்கள். ஆளுக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட ஆசைப்பட்டோம், தனியாக படம் செய்து அதை நன்றாக சாப்பிட்டோம். இப்ப, மீண்டும் அரை பிஸ்கட் போதும்ங்கிற நிலைக்கு வந்துவிட்டோம். ஸோ வீ வில் கம்டுகெதர்.
எங்களுக்குள் போட்டி இல்லை. அது ரசிகர்கள் ஏற்படுத்தியது. எங்களுக்கு சான்ஸ் கிடைத்ததே பெரிய விஷயம். நாங்க அப்பவே முன்உதாரணமாக இருக்க முடிவு செய்தோம். அவரும் அப்படிதான் இருக்கிறார். நானும் அப்படிதான் இருக்கிறேன். ஸோ, நாங்கள் சேருவது என்பத பிஸினஸ் ரீதியாக புதுசாக, ஆச்சரியமாக இருக்கலாம்.
இருக்கலாம். எங்களுக்கு எப்போதோ நடக்க வேண்டியது, இப்போதாவது நடக்குதே, ஆகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறோம். நாங்கள் மற்றவர் படத்தைதயாரிக்க ஆசைப்பட்டோம். இப்ப வேணாம், நல்ல போயிட்டு இருக்குதேனு நாங்களே எங்களை தடுத்துகிட்டு இருந்தோம்' என்று கூறியுள்ளார்.