பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார்
சிவகுமார் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், இன்று இரண்டு ஹீரோக்களின் தந்தை. அவரது சினிமா கேரியரில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்திருக்கிறார், என்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று 1985ம் ஆண்டு தீபாவளிக்கு அவரது இரண்டு படங்கள் வெளிவந்தது. ஒன்று 'சிந்து பைரவி', மற்றொன்று 'பிரேம பாசம்'.
இதில் 'சிந்து பைரவி' பெரிய வெற்றி பெற்றதோடு அதில் நடித்த சுஹாசினிக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனால் அந்த படம் இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் இந்த படத்துடன் வந்த 'பிரேம பாசம்' பற்றிய எந்த தகவலும் பெரிதாக இல்லை. கே.விஜயன் இயக்கிய இந்த படத்தில் சிவகுமார், ரேவதி நடித்திருந்தனர். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார். 'வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்' என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றது இந்த படத்தில்தான்.
இதே தீபாவளியன்று கரையைத் தொடாத அலைகள், படிக்காதவன், ஜப்பானில் கல்யாணராமன், சமயபுரத்தாளே சாட்சி, ஆஷா, சின்னவீடு, பெருமை” ஆகிய படங்கள் வெளிவந்தன.
சிவகுமார் நடித்த சிந்து பைரவி, பிரேம பாசம் படத்தின் ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படத்திலுமே அவரை விட பல வயது குறைந்த சுலக்ஷனா, சுஹாசினி, ரேவதி என்ற இளம் நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்கள்.