உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு

பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு

இன்றைக்கு திரைப்பட விமர்சனங்களின் போக்கு மாறி விட்டது. பணம் பெற்றுக் கொண்டு செய்யப்படும் விமர்சனங்களை 'புரமோசன்' என்கிறார்கள். ஒரு காலத்தில் பத்திரிகைகளில் நேர்மையான விமர்சனங்கள் வந்தபோதும் அதையும் எதிர்த்து சில வழக்குகள் தொடரப்பட்டது. அப்படி தொடரப்பட்ட முதல் வழக்கு சிவாஜி நடித்த 'அன்பு' படத்தை பற்றி அன்றைய முன்னணி வார இதழ் எழுதிய விமர்சனத்தின் மீது.

1953ம் ஆண்டு வெளியான இந்த படத்தை எம்.நடேசன் என்பவர் இயக்கி, தயாரித்தார். சிவாஜியுடன் டி.ஆர்.ராஜகுமாரி, பத்மினி, டி.எஸ்.பாலய்யா, லலிதா, கே.தங்கவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார்.

படத்தின் நாயகி டி.ஆர்.ராஜகுமாரி ஒரு வயதான முதியவரை திருமணம் செய்து கொள்கிறார். அந்த முதியவரின் மகன் சிவாஜி. ராஜகுமாரி அந்த முதியவரோடு வாழ்ந்த வாழ்க்கையில் கர்ப்பமாகிறார். இந்த நிலையில் முதியவர் இறந்து விடுகிறார். சிவாஜி, பத்மினியை திருமணம் செய்கிறார். ஆனால் சிலர் ராஜகுமாரியின் வயிற்றில் வளர்வது சிவாஜியின் குழந்தை என்று வதந்தியை பரப்புகிறார்கள். இதை நம்பும் பத்மினி, ராஜகுமாரியை கொடுமைப்படுத்த தொடங்குகிறார். இதற்கு என்ன தீர்வு என்பதுதான் படத்தின் கதை.

முதலில் சில தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படம் பின்னர் மற்ற ஊர் தியேட்டர்களில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. குறிப்பிட்ட அந்த பிரபல வாரப் பத்திரிகை படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் தங்களை தாங்களே விமர்சிப்பது போன்று விமர்சனம் வெளியிட்டது. இந்த விமர்சனம் படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது. அதோடு படத்தை அவதூறு செய்கிறது என்று தயாரிப்பாளர் நடேசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்படி நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்னை பேசி தீர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !