தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்க : நீதிபதி முன் கதறிய நடிகர் தர்ஷன்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன் கடந்த வருடம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் அவரும் மற்றும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட நடிகையும், தர்ஷனின் காதலியுமான பவித்ரா கவுடா மற்றும் 16 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் இந்த ஜாமினை ரத்து செய்ததை தொடர்ந்து மீண்டும் நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் அவர் ஜாமினுக்கு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தன்னை பெல்லாரி சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார் தர்ஷன். இதுகுறித்து, சிறையில் இருந்த தர்ஷனிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதி முன்பாக தர்ஷன் கதறி அழுததாகவும், தான் சூரியனைப் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் தனது உடல்நிலை ரொம்பவே மோசமாக இருக்கிறது, நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை எனக்கு தயவுசெய்து விஷம் கொடுங்கள் என்று கூறியதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் இவ்வாறு எல்லாம் பேசக்கூடாது என அவரை கண்டித்த நீதிபதி, பெல்லாரி சிறைக்கு அவரை மாற்றும் கோரிக்கை மனுவை நிராகரித்தார். அதேசமயம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் சிறை வளாகத்தில் சுதந்திரமாக உலாவுவதற்காக சில சலுகைகளை வழங்கியதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.