உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25 வருடங்களை நிறைவு செய்த 'ரிதம்'

25 வருடங்களை நிறைவு செய்த 'ரிதம்'


வஸந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், லட்சுமி, நாகேஷ், மணிவண்ணன் மற்றும் பலர் நடிப்பில் 25 வருடங்களுக்கு முன்பு 15 செப்டம்பர் 2000ம் ஆண்டு வெளிவந்த படம் 'ரிதம்'.

இயக்குனர் வஸந்த், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதன் முதலில் இணைந்து பணிபுரிந்த படம். படத்தில் இடம் பெற்ற “நதியே நதியே, காற்றே என் வாசல் வந்தாய், தனியே தன்னந்தனியே, அன்பே இது, ஐயோ பத்திக்குச்சி,” ஆகிய பாடல்கள் “நீர், காற்று, பூமி, வானம், நெருப்பு” ஆகிய பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.

கணவர் ரமேஷ் அரவிந்தை இழந்த மீனா, மனைவி ஜோதிகாவை இழந்த அர்ஜுன் இருவருடைய சந்திப்பும் யதேச்சையாக நடக்க அது அவர்கள் வாழ்வை எப்படி கொண்டு போகிறது என்பதுதான் படத்தின் கதை. வாழ்க்கையை ஏதோ ஒரு விதத்தில் இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை கிடைக்காமலா போய்விடும் என்பதை மென்மையாகச் சொன்ன ஒரு படம்.

அர்ஜுன், மீனா கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது பிளாஷ்பேக்கில் வரும் ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் கதாபாத்திரங்களும், லட்சுமி, நாகேஷ், மணிவண்ணன் மற்றும் மீனாவின் மகனாக நடித்திருக்கும் சிறுவனின் கதாபாத்திரம் என அனைத்துமே இயல்பான கதாபாத்திரங்களாக அமைந்தவை.

அந்தக் காலத்தில் பெருமளவில் ரசிக்கப்படாத ஒரு படம் என்றாலும் இப்போது பார்த்தாலும் புதிய படமாகப் பார்க்க வைக்கும் ஒரு படம். 'அன்டர்ரேட்டட்' படம் என்று சொல்வார்கள். அப்படியான ஒரு படம்தான் இந்த 'ரிதம்'.

வஸந்த் இயக்கிய முதல் படமான 'கேளடி கண்மணி' படத்துடன் ஒப்பிடும் போது சிறிதும் மதிப்பு குறையாத ஒரு படம் தான் 'ரிதம்'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !