உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கர்நாடக அரசை எதிர்த்து மல்டிபிளக்ஸ் சங்கம் வழக்கு

கர்நாடக அரசை எதிர்த்து மல்டிபிளக்ஸ் சங்கம் வழக்கு

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வருடங்களாக சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் ரூ.1000 வரை இருந்தன. கர்நாடக மாநில அரசு பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு அந்த டிக்கெட் கட்டணங்களை கடந்த வாரம் அதிரடியாகக் குறைத்து அரசாணை வெளியிட்டது. அதிகபட்ச கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது. 75 இருக்கைகளுக்குக் குறைவான பிரீமியம் தியேட்டர்களுக்கு மட்டும் அக்கட்டணம் பொருந்தாது என அறிவித்தது.

இந்நிலையில் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தினர், மற்றும் பிவிஆர் ஐனாக்ஸ் பங்குதாரர், கர்நாடக அரசின் ஆணையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு 'காந்தாரா' படத் தயாரிப்பாளர்களான ஹம்பாலே பிலிம்ஸ் உள்ளிட்ட சில கன்னடத் தயாரிப்பாளர்களும் ஆதரவு கொடுத்தனர்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி ரவி வி ஹோஸ்மணியிடம் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி இடைக்காலத் தீர்ப்பு என்பது செப்டம்பர் 23ம் தேதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தனது முடிவு பொது நலன் கருதியே எடுக்கப்பட்டதாக மாநில அரசு வாதிட்டது. மாநில அரசின் வழக்கறிஞர், கர்நாடக சினிமா சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் கீழ் திரைப்பட டிக்கெட் விலைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். புதிய விதி, இயக்குநர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக, அரசியலமைப்பின் 38-வது பிரிவின் கீழ் உள்ள கொள்கைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

இன்றைய விசாரணையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) நீதிமன்றத்தில் தலையிடவும், உதவவும் விரும்புவதாகத் தெரிவித்தது. KFCC-யின் வழக்கறிஞர் மனுதாரர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், நீதிமன்றம் KFCC-யின் வழக்கறிஞரின் வாதங்களை விரிவாகக் கேட்கவில்லை மற்றும் அந்த அமைப்பு ஒரு உட்படுத்தும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதற்கு முன்பும் கர்நாடக அரசு இப்படி டிக்கெட் கட்டணங்களைக் குறைத்த போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை தியேட்டர் சங்கத்தினர் பெற்றார்கள்.

ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. கர்நாடகாவில் டிக்கெட் கட்டணம் குறைந்தால் அது அவர்களது பட வசூலை பாதிக்கும் என இந்த வழக்கில் மும்முரம் காட்டுவதாக கர்நாடகத் திரையுலகத்தின் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !