உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா?

பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா?


பழம்பெரும் நடிகை பண்டரி பாயை அனைவருக்கும் தெரியும், ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்தவர், பின்னர் எம்ஜிஆருக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர். ஆனால் அவரது தங்கை மைனாவதியை பற்றி அதிகம் தெரியாது. 'மாலையிட்ட மங்கை' படத்தில் 'செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்' பாடலில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஆடியவர்தான் மைனாவதி.

தனது சகோதரி பண்டரிபாயின் நடிப்பை பார்த்து வியந்துபோன மைனாவதி அவரைப்போல புகழ்பெற வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்தார். 'சந்தா சாக்கு' எனும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மைனாவதி, தொடர்ந்து சோதாரி, நானே பகவதி, அனுராதா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் 'கண்கள்' படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு மாலையிட்ட மங்கை, பொன்வயல், என் மகள், நல்லவீடு, குலதெய்வம், ஆரவல்லி, பொம்மை கல்யாணம், நான் வளர்த்த தங்கை, அன்பு எங்கே, வண்ணக்கிளி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சில காலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார், பல கன்னட தொடர்களை தயாரிக்கவும் செய்தார். இவரது மகன் ஷியாம் சுந்தர் கன்னட சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருந்தார். அவரது திடீர் மரணம் மைனாவதியை நிலைகுலைய வைத்தது. மகன் இறந்த கவலையிலேயே 2010ம் ஆண்டு தனது 78வது வயதில் பெங்களூருவில் காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !