உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி

திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி


தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. ரசிகர்களால் மெகா ஸ்டார் என அன்பாக அழைக்கப்படுகிறார். இடையில் சில வருடங்கள் அரசியல் பக்கம் போய்விட்டு மீண்டும் சினிமாவுக்கே திரும்பி வந்தார். இப்போதுள்ள இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு அவரும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி அறிமுகமாகி இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளிவந்த 'பிரணம் கரீடு' என்ற படத்தில் அவர் அறிமுகமானார். எந்த ஒரு சினிமா பின்னணியில் இருந்தும் வராதவர். ஆனால், அவர் அறிமுகமாகி வளர்ந்த பிறகு அவரது குடும்பத்தினர் பலரும் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் அதிகாரம் மிக்க ஒரு குடும்பமாக இருக்கிறார்கள். அவரது தம்பி பவன் கல்யாண், சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து பெரிய ஹீரோவாகி, அரசியல் கட்சி ஆரம்பித்து, ஆந்திர மாநில துணை முதல்வராகவே ஆகிவிட்டார்.

சென்னையில் இருந்த பிலிம் சேம்பர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் சிரஞ்சீவி. தமிழில் கே பாலசந்தர் இயக்கத்தில் 1981ல் வெளிவந்த '47 நாட்கள்' படத்தில் கதாநாயகனாகவும், அதே ஆண்டில் வெளிவந்த ரஜினிகாந்த் நடித்த 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். 1989ல் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'மாப்பிள்ளை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

தற்போது, 'மன ஷங்கர வர பிரசாத் காரு, விஷ்வம்பரா' ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அதற்கடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.
தன்னுடைய சினிமா பயணம் ஆரம்பமான இன்றைய தினம் குறித்து சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

22 செப்டம்பர் 1978

'கொணிடெல சிவ சங்கர் வரபிரசாத்' என்று அழைக்கப்படும் நான், “பிரணம் கரீடு” திரைப்படம் மூலம் 'சிரஞ்சீவி'யாக உங்களுக்கு அறிமுகமாகி, இன்றுடன் 47 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்தத் திரைப்படம் மூலம் எனக்கு நடிகராக உயிர் கொடுத்து, உங்கள் அண்ணனாக, மகனாக, உங்கள் குடும்ப உறுப்பினராக, ஒரு மெகாஸ்டாராக... எந்நேரமும் என்னை ஆதரித்து, அன்பு செலுத்திய தெலுங்கு திரைப்பட ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

இன்றுவரை 155 திரைப்படங்களை நான் முடித்துள்ளேன் என்றால்... அதற்குக் காரணம் உங்கள் அனைவரின் தன்னலமற்ற அன்பு.

இந்த 47 ஆண்டுகளில் நான் பெற்ற பல விருதுகள், கவுரவங்கள் என்னுடையவை அல்ல, அவை உங்கள் அனைவருக்கும் சொந்தமானவை, நீங்கள் வழங்கியவை. நம்மிடையே இந்த அன்பின் பிணைப்பு எப்போதும் இவ்வாறே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !