பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு
நகைச்சுவை நடிகர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று வசனம் மூலமாக சிரிக்க வைப்பவர்கள், எம்.ஆர்.ராதா, தங்கவேலு, வி.கே.ராமசாமி முதல் விவேக் வரை இந்த வகையை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை பாடி லேங்குவேஜ் எனப்படும் உடல்மொழியால் சிரிக்க வைப்பவர்கள். நாகேஷ், சுருளிராஜன் முதல் வடிவேலு வரை இந்த வகையை சேர்ந்தவர்கள்.
இந்த உடல்மொழி காமெடிக்கு முன்னோடி வி.எம்.ஏழுமலை. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். உடல் மொழி, குரல் மொழி இவரிடம் பிரபலம். படம் பார்ப்போரைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வார். வடிவேலுவிடம் காணப்பட்ட உடல்மொழி அப்படியே ஏழுமலையிடம் இருந்தது.
பின்னாளில் தயாரிப்பாளராகி பல படங்களை தயாரித்தார். 1962ல் வெளியான 'எல்லோரும் வாழ வேண்டும்' என்ற படத்தை தயாரித்து நடித்தார். இதுதான் இவரது கடைசி படம். இந்த படம் அவர் மறைவுக்கு பிறகுதான் வெளிவந்தது.