உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி

தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி

புதுடில்லி : 71வது தேசிய திரைப்பட விருதுகளை டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கலைஞர்களை கவுரவித்தார். தமிழ் கலைஞர்கள் எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் தேசிய விருதுகளை பெற்றனர்.

இந்திய திரைப்படங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருதில் சிறந்த தமிழ் படமாக ‛பார்க்கிங்' தேர்வானது. சிறந்த நடிகர்களாக ஷாரூக்கான்(ஜவான்), விக்ராந்த் மாஸே(12த் பெயில்) மற்றும் சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகினர். சிறந்த படமாக ‛12த் பெயில்', சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் தேர்வாகினர். சிறந்த துணை நடிகராக எம்எஸ் பாஸ்கர், துணை நடிகையாக ஊர்வசி தேர்வாகினர்.



பார்க்கிங் படத்திற்கு விருது
தேசிய விருதுக்கு தேர்வானவர்களுக்கு இன்று(செப்., 23) டில்லியில் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். முதலில் ஆவணப்படங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் ஆவணப்படமான ‛லிட்டில் விங்ஸ்' சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை பெற்றது. இதன் ஒளிப்பதிவாளர் சரவண மருது சவுந்திரப்பாண்டி இறந்துவிட்டதால் அவருக்கு பதில் அவரது அம்மா பெற்றுக் கொண்டார்.



தொடர்ந்து மாநில வாரியாக தேர்வான படங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‛பார்க்கிங்' பட தயாரிப்பாளர் சினீஷ் பெற்றுக் கொண்டார்.

2வது தேசிய விருது பெற்ற ஜிவி பிரகாஷ்



அதனைத்தொடர்ந்து நடனம், சண்டை, ஆடை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வாத்தி படத்திற்காக ஜிவி பிரகாஷ். இது இவர் பெறும் இரண்டாவது தேசிய விருதாகும்.

5 குழந்தை நட்சத்திரங்களுக்கு விருது



‛நாள் 2' என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதை மாஸ்டர்கள் பார்கவ் சுனிதா, ஸ்ரீனிவாஸ் போகலே மற்றும் சிறுமி தீரிஷா விவேக் தோசர் ஆகியோரும், ஜிப்ஸி என்ற மராத்தி படத்திற்காக மாஸ்டர் கபீர் சசி காந்தேவும், காந்தி தாத்தா சேட்டு என்ற தெலுங்கு படத்திற்காக சிறுமி சுக்ரிதி வெனி ஆகிய 5 பேர் தேசிய விருதை ஜனாதிபதி கையால் பெற்றனர்.

எம்எஸ் பாஸ்கர், ஊர்வசிக்கு விருது



சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை ‛வாஸ்' என்ற குஜராத்தி படத்திற்காக ஜானகி போதிவாலாவும், ‛உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக நடிகை ஊர்வசியும் பெற்றனர்.



சிறந்த துணை நடிகருக்கான விருதும் இருவருக்கு கிடைத்தது. பார்க்கிங் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்எஸ் பாஸ்கர் பெற்றார். பூக்காலம் என்ற மலையாள படத்திற்காக நடிகர் விஜயராகவனும் பெற்றனர்.

ஷாரூக், ராணி முகர்ஜிக்கு விருது



சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு பேர் பெற்றனர். ஜவான் படத்தில் நடித்தற்காக ஷாரூக்கானுக்கும், 12த் பெயில் படத்தில் நடித்ததற்காக விக்ரம் மாஸேவிற்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது ‛மிசஸ் சாட்டர்ஜி வெசஸ் நார்வே' என்ற படத்திற்காக ராணி முகர்ஜியும் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !