'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை
ஆந்திர மாநில துணை முதல்வரான பவன் கல்யாண் நடித்து நாளை வெளியாக உள்ள 'ஓஜி' படத்திற்கு டிக்கெட் கட்டண உயர்வை தெலங்கானா மாநிலம் அறிவித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மகேஷ் யாதவ் என்பவர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தெலங்கானா மாநில அரசின், 'ஓஜி' படத்திற்கான சினிமா டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கும் தள்ளி வைத்தார்.
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அல்லது கூடுதல் கலெக்டர் ஆகியோருக்குத்தான் டிக்கெட் கட்டண உயர்வை அறிவிக்கும் அதிகாரம் உள்ளது. உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த சிறப்பு தலைமைச் செயலருக்கு அந்த அதிகாரம் இல்லை என மகேஷ் யாதவ் தரப்பில் வாதிடப்பட்டது.
'ஓஜி' படத்தின் பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணமாக ரூ.800, மற்றும் ஒரு வார காலத்திற்கு சிங்கிள் ஸ்கிரீன்களுக்கு ரூ.277 மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.445 எனவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான இந்த கட்டண உயர்வுடன் ஏற்கெனவே முன்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால் தியேட்டர்காரர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் ஆந்திர மாநிலத்தில் உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணங்களுடன் 'ஓஜி' காட்சி நடைபெற உள்ளது.
அதே சமயம், கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் மாநில அரசால் குறைக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அரசுக்கு கட்டணத்தைக் குறைக்க அதிகாரம் இல்லை என்று மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் சார்பில் முறையிடப்பட்டது. அதனால், அங்கு மீண்டும் டிக்கெட் கட்டணம் 800, 900 என உயர்ந்துள்ளது.