உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு

ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆபாச இணைய தளங்கள் செயல்பட்டு வருகிறது. அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தபோதும் அதையும் மீறி செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள், வீடியோக்களை இதற்கு பயன்படுத்தி வருகிறது. அதாவது நடிகர், நடிகைகளின் படங்களை கிளிக் செய்தால் அவர்கள் தொடர்பான ஆபாச படங்கள் வரும் என்று நம்ப வைத்து அதன் மூலம் தங்கள் பக்கங்களுக்குள் இளைஞர்களை இழுப்பதற்காக இப்படி செய்கின்றன.

அந்த வரிசையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் படத்தை சில இணைய தளங்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நாகார்ஜுனா சார்பில் அவரது வக்கீல் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

''சில இணையதள பக்கத்தில் நாகர்ஜுனாவின் படம் போடப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால் அது ஆபாச இணையதளத்துக்கு செல்கிறது. அதேபோல சில ஆடை விளம்பரங்கள் கூட இவரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் சில விளம்பரங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து அதனை விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தனது தனியுரிமையை பாதிப்பதாக உள்ளது, இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்'' என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !