ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு
நடிகர் ரவி மோகன் சமீபத்தில் சொந்த படத் தாயரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற அந்த நிறுவனத்தின் பெயரில் 'ப்ரோ கோட்' என்ற படம், யோகி பாபு நடிக்கும் புதிய படம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் உள்ளன.
இதில் ரவிமோகன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பிற்கு டில்லியைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்தப் பெயரில் 'டிரேட் மார்க்' வாங்கியிருப்பதாக மனு செய்திருந்தார்கள்.
நீதிமதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. மதுபான நிறுவனம் 'ப்ரோ கோட்' படத் தயாரிப்பு, விளம்பரம், மார்க்கெட்டிங், வினியோகம், வெளியீடு ஆகியவற்றில் தலையிட 3 வார காலத் தடையை நீதிபதி விதித்துள்ளார்.
அதற்குள் மதுபான நிறுவனத்திற்கு ரவி மோகன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி பதில் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்குள் அனுப்பப்படவில்லை என்றால் தடை நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.
ரவி மோகன் ஸ்டுடியோஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான நிறுவனத்தின் டிரேட்மார்க் விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அதற்கு எதிர்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.