கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1'
இந்தியத் திரையுலகத்தில் கன்னட சினிமா என்பது சில வருடங்கள் முன்பு வரை அதிகம் கண்டு கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. அதை 2022ல் வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் மாற்றியமைத்தது. அப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைக் குவித்து உலக அளவில் 1200 கோடி வசூலைக் குவித்த படமாக அமைந்தது.
அதற்கடுத்து வெளிவந்த மற்றொரு கன்னடப் படமான 'காந்தரா' சுமார் 15 கோடி செலவில் தயாராகி 400 கோடிக்கும் சற்றே கூடுதலான வசூலைப் பெற்றது. அதன்பின்பு கன்னட சினிமா பக்கமும் இந்தியத் திரையுலகம் திரும்பியது.
சிறிய இடைவெளிக்குப் பின்பு தற்போது மற்றொரு கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் பெரிய வசூலைக் குவித்து வருகிறது. தற்போது 415 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அதிக வசூலைக் குவித்த கன்னடப் படங்களில் 'காந்தாரா சாப்டர் 1' படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையில் 408 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்தில் இருந்த 'காந்தாரா' படம் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.