2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு
இந்தியத் திரையுலகத்தில் மதிப்பு மிக்க விருதாக தேசிய திரைப்பட விருதுகள் இருக்கின்றன. 2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் ஜனாதிபதி கையால் டில்லியில் வழங்கப்பட்டது. மலையாள நடிகர் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். தமிழில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் சிறந்த பின்னணி இசைக்காகவும், நடிகர் எம்எஸ் பாஸ்கர் 'பார்க்கிங்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றார்கள். சிறந்த திரைக்கதைக்கான விருதை 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றார். சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'பார்க்கிங்' படம் தேர்வு செய்யப்பட்டது.
தற்போது 2024ம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. nfaindia.org என்ற இணையதளத்தில் 'லாகின்' செய்து அதற்காக விண்ணப்பிக்கலாம். அதற்கான கடைசி தேதி அக்டோபர் 31, 2025.
2024ம் ஆண்டில் தமிழில், “அமரன், மகாராஜா, ஜமா, தங்கலான், மெய்யழகன்” ஆகிய படங்கள் தேசிய விருதுகளுக்கான சில பிரிவுகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. “தி கோட், வேட்டையன், லால் சலாம், இந்தியன் 2, ராயன், லப்பர் பந்து, கங்குவா, விடுதலை 2,” ஆகிய படங்களும் ஏதாவது பிரிவுகளில் விண்ணப்பிக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.