'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு
தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு தமிழில் தயாரித்துள்ள இரண்டாவது படம் 'டியூட்'. அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையிலும், இரவு ஐதராபாத்திலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் அனைவருமே இந்த தீபாவளிக்கு வெளிவரும் படங்களில் இளம் ரசிகர்களின் வரவேற்பை இந்தப் படம் அதிகம் பெறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்கள்.
ஒரே சமயத்தில் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. பிரதீப்பின் முந்தைய இரண்டு படங்களும், இளம் ரசிகர்களின் வரவேற்பால்தான் 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இளம் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்ற நடிகையாக மமிதா பைஜு இருக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையும் படத்தில் இருக்கிறது.
படத்தைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் மைத்ரி ரவி, படத்தைப் பார்த்துவிட்டதாகவும், இப்படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஆக அமையும் என்ற நம்பிக்கை 100 சதவீதம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். படத்தின் கரு மற்றும் திரைக்கதை பரபரப்பாவும், சுவாரசியமாகவும் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.